டங்ஸ்டன் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி விரைந்த விவசாயிகள்!
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பல்லுயிர் தளமான அப்பகுதியில் சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்பகுதியை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சியுள்ள இடங்களை மறு ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேச, அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி விவசாயிகள் மற்றும் பாஜகவினர் உட்பட 10 பேர் மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டனர்.
இன்று டெல்லி சென்றடையும் விவசாயிகள் நாளை மத்திய சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்புக்கு பின் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.