“டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார் ” - ஜெயக்குமார் விமர்சனம்!
வழக்குகளுக்கு பயந்து டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார். அவர் அதிமுக
குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி(டிச.24), அவரது நினைவிடத்தில்
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை
செலுத்த உள்ளார். அதற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு, சென்னை காவல்
ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவிதமான சார்பும் இன்றி அனைவரும்
சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாஜக அல்லாத கட்சிகள், அது எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை பொதுச்செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.
பாஜகவை பொறுத்த வரைக்கும் பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி உள்ளார். நேற்றும்
இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை. 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி
இல்லை என்பதை பலமுறை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். டிடிவி. தினகரன் தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று பாஜகவிடம் சரணடைந்துள்ளார். பாஜகவிடம் சரணடைந்த ஒருவர், பாஜகவிடம் கூட்டணிக்கு
வாங்க என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அதிமுகவை பொருத்தவரை தன்மானத்தோடு
இயங்கக்கூடிய ஒரு இயக்கம். யார் காலிலும் விழவேண்டிய அவசியம் எங்களுக்கு
கிடையாது.
பொதுச்செயலாளரை பொருத்தவரை இந்த நிலைப்பாடு தொடரும். அம்பேத்கர் இந்தியா முழுவதும் போற்றக்கூடிய மாபெரும் தலைவர். அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாட்டிற்கு அளித்தவர். அம்பேத்கர் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக்கூடாது. சிறுமைப்படுத்துகின்ற செயலை செய்தால் மக்கள் நிச்சயமாக அவர்களை நிராகரிப்பார்கள்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சர்க்காரியா கமிஷனை கண்டு பயந்தது யார்? அன்றைக்கு பயந்து காவிரி உரிமை பிரச்சனையில், காவிரி உரிமையை விட்டுக் கொடுத்தார். பச்சைக்கொடி காட்டி கச்சத் தீவை தாரை வார்த்தார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசுக்கு பயந்து உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கி வந்தனர். தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து விட்டு, மகனுக்கு முடிசூட்டி விட்டோம் என்ற ஆனந்தத்தில் ஸ்டாலின் இருக்கிறார். தமிழ்நாடு எப்படி போனாலும் அவருக்கு கவலை இல்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திமுக அரசிற்கு மிகப்பெரிய குட்டை வைத்துள்ளது. சிபிஐக்கு பயந்து மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றமே பயத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செல்லக் குழந்தை உதயநிதி. நல்ல பிள்ளை ஸ்டாலின். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டுக்குழு கூடும் பொழுது எங்களுடைய முடிவை நாங்கள் தெரிவிப்போம்” என்றார்.