போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சி | மோசடி கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை தனிப்படை!
போலி சான்றிதழ் கும்பலை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளனர்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்வதற்கு
விசா எடுப்பது மிகவும் கடினமான விஷயமாகும். இதன் காரணமாக போலி சான்றிதழ்கள்
தயாரித்து மாணவர் விசா மற்றும் டூரிஸ்ட் விசா ஆகியவற்றின் மூலமாக
அமெரிக்காவில் நுழைந்து விடலாம் என தொடர்ந்து இளைஞர்கள் பலர் முயற்சி செய்து
சிக்கி வருகின்றனர்.
குறுகிய கால விசா மூலமாக அமெரிக்காவில் நுழைந்து அங்கு ஏதேனும் ஒரு வேலையை பெற்று தங்கி சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் என பலரும் அமெரிக்க மோகம் கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். கடந்த இரண்டு மாத காலமாக இந்த மோசடி அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மெல்வின் எனப்படும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு அதிகாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது இர்பான் கான், செய்யது பைத் க்வாட்ரி ஆகிய இரண்டு இளைஞர்கள் போலி சான்றிதழ் மூலமாக அமெரிக்கா விசாவிற்கு முயற்சி செய்ய வந்துள்ளதாக புகார் அளித்திருந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் மருத்துவ கண்காட்சிக்கு செல்வதாக கூறி போலியான சான்றிதழ்கள் பலவற்றை கொடுத்து சுற்றுலா விசாவில் செல்ல முயற்சி செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தில் ஹேம்நாத் என்ற இளைஞர் போலி கல்வி சான்றிதழ்,
மாணவர் விசா எடுக்க முற்பட்டது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டு கைது
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இம்மாதம் நவம்பர் 16-ம் தேதி களளேம் என்ற
இளைஞர் தெலங்கானாவில் இருந்து போலியான பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்
சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு மாணவர் விசா மூலமாக அமெரிக்கா செல்ல முற்பட்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படியுங்கள்: சபாநாயகன் படத்தின் ‘பேபி மா’ பாடல் இணையத்தில் வைரல்!
மருத்துவக் கண்காட்சி, மேற்படிப்புக்காக செல்லுதல் என அமெரிக்காவிற்கு நுழைய
முயற்சிக்கும் இளைஞர்கள் அடுத்த கட்டமாக அமெரிக்காவில் இருக்கும் ஐ டி
நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்திருப்பதாக போலி பணி ஆணைகளும் தயாரித்து அதன்
மூலம் அமெரிக்காவிற்கு செல்வதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக 50-க்கும் மேற்பட்ட நபர்கள் போலியாக சான்றிதழ் மூலம் அமெரிக்காவிற்கு
செல்ல விசா எடுக்க முயன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில்
பெரும்பாலானோர் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என
தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்து போலீஸ்
சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க
தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் மற்றுமொரு போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் ஹைதராபாத்தில் இருந்து
செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல் கல்வித்தகுதி சான்றிதழுக்கு ஏற்றார் போல் விசா பெறுவதற்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்ச ரூபாய் வரை வாங்குகின்றனர். எந்தவித சான்றிதழ்களும் இல்லையெனில் அனைத்தையுமே கொடுப்பதற்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து போலி சான்றிதழ்கள் தருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஹைதராபாத்தில் செயல்படும் போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை பிடிப்பதற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளனர்.