#Trichy | லாரியில் இருந்து ரூ.50 லட்சத்தை திருடிய கும்பல் - தட்டி தூக்கிய போலீசார்!
திருச்சி அருகே காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்து ரூ.50,68,200 பணத்தை திருடி சென்ற கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, காவல்காரன் பாளையம் பகுதியில் கடந்த 3-ம் தேதி காய்கறி லோடு ஏற்றி வந்த டிரைவர் ஆனந்த் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் தேனீர் அருந்த சென்றுள்ளனர். இருவரும் தேநீர் அருந்திவிட்டு வந்தபோது 3 நபர்கள் அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் லாரியில் இருந்து குதித்து ஓடி அருகே நின்று கொண்டிருந்த கார் மூலம் தப்பி சென்றனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வந்து லாரியை சோதனை செய்தனர். அப்போது, காய்கறி லோடு இறக்கிவிட்டு லாரியில் வைத்திருந்த அதற்கான தொகை ரூ.50,68,200 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரிலும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் மேற்பார்வையில் ஜீயாபுரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலச்சந்தர் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகப்படும் படி சிலர் காரில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் நவலூர் குட்டப்பட்டு அறியாற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்த காரில் சோதனை செய்தனர். அப்போது திடீரென 5 பேர் காரில் இருந்து இறங்கி ஓடினர். பின்னர் அறியாற்று பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற 5 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன் குமார் (25), போஸ் என்ற இசக்கிமுத்து (25), திருநெல்வேலியை சேர்ந்த வெள்ளை பாண்டி (22), முத்து மணிகண்டன்(25) மதுரையை சேர்ந்த சூர்யா (27) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்த லாரியில் இருந்து திருடிய ரூ.26 லட்சத்தை மீட்டனர். மேலும் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது அவர்களில் 3 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 5 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை
எடுத்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்
தெரிவித்துள்ளார்.