#UttarPradesh - ஐ கலக்கிய பெண் போலீஸ்! என்ன செய்தார் தெரியுமா?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, பெண் போலீஸ் ஒருவர் இரவு நேரத்தில் சுற்றுலா பயணி போல சென்று சோதனை செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்தப் பிரச்னையால் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதை சரி செய்யும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பெண் போலீஸ் சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உதவி காவல் ஆணையாளராக பணிபுரிந்து வருபவர் சுகன்யா சர்மா (33). அந்நகரில் இரவு நேரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்காக, சுற்றுலா பயணி போல இரவில் வலம் வந்துள்ளார். அவர், இரவு நேரத்தில் மப்டி உடையில் ஆக்ரா கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வெளியே நின்று கொண்டார். பின்னர், தொலைபேசியில் போலீசாரை அழைத்து, சாலையில் தனியாக நிற்பதால் பயத்துடன் இருப்பதாகவும், உங்களின் உதவி தேவை எனவும் தெரிவித்திருக்கிறார்.
மறுபுறம் பேசியவர், அவரை பாதுகாப்பான இடத்தில் நிற்கும்படி கூறிவிட்டு, சுகன்யா சர்மாவின் விவரங்களை பெற்று கொண்டார். இதனையடுத்து, பெண் ரோந்து குழுவில் இருந்து பேசிய ஒருவர், உங்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வருகிறோம் என கூறி தைரியம் அளித்துள்ளார். உடனே, "அவசரகால பொறுப்பு நடைமுறை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக, உங்களை சோதனை செய்தேன். அதில், தேர்ச்சி பெற்று விட்டீர்கள்" என அவர்களிடம் சுகன்யா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுகன்யா வாடகைக்கு ஆட்டோ ஒன்றை அழைத்து போலீஸ் என கூறாமல் அதில் பயணம் செய்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் அவர் இறங்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இறக்கி விட்டுள்ளார். சுகன்யாவின் செயலுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவருடைய செயலை, ஒவ்வொரு நகரில் உள்ள போலீசும் பின்பற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.