கிழிக்கப்பட்ட சம்மன்... போலீசாருக்கும், காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு - சீமான் வீட்டில் குவியும் தொண்டர்கள்!
நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு இந்த விவகாரம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியும், நேரில் ஆஜராகத்தால் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சீமான் வீட்டுக்கு சென்ற வளசரவாக்கம் போலீசார், சீமான் இல்லாததால் வீட்டின் வாசலில் நாளை காலை ஆஜராக வேண்டும் என சம்மன் ஒட்டினர். அப்போது வீட்டில் இருந்த காவலாளி ஒருவர் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தெறிந்தார்.
சம்மன் கிழித்தது தொடர்பாக விசாரிக்க வந்த நீலாங்கரை போலீசாரை வீட்டினுள் நுழைய விடாமல், சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த காவலாளி போலீசாரிடம் துப்பாக்கியை காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவலாளிகள் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீமான் வீட்டில் முன்பு நாதக கட்சி நிர்வாகிகள் குவிய தொடங்கியுள்ளனர்.