ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எனவே, 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 5) டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.