ரூ.26 கோடியில் திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களுக்கு ரோப்கார்!
சென்னை திருநீர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :
"இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் 1,290 கோயில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் பழனி, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம் உள்ளிட்ட 11 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்"
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.