திருப்பூர் ரிதன்யா வழக்கு - மாமியார் கைது!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். (ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார்.) இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (வயது 28) (திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன்) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த சூழலில், கடந்த ஜூன் 28ம் தேதி தனது காரில் கணவர் வீட்டிலிருந்து கிளம்பிய ரிதன்யா மொண்டி பாளையம் கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தினார். பின்னர், எனது இந்த முடிவுக்கு கணவர், மாமனார், மாமியார்தான் காரணம் என தனது தந்தைக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு காரிலேயே மயங்கி உயிரிழந்தார். காரினுள் ரிதன்யா மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரிதன்யாவின் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். வரதட்சனை கொடுமையால்தான் தன் மகள் உயிரிழந்ததாக ரிதன்யாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரிதன்யாவின் மாமியார் தலைமறைவானதாக தகவல் வெளியனது. இந்த நிலையில், அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர்.