Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல்: முதலமைச்சர் #MKStalin கண்டனம்! பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

12:10 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் சன்மானம் என்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே) சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சுக்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். நாங்கள் மகாராஷ்டிராவில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று கோருகிறார். மக்களவைத் தேர்தலில் தவறான தகவலை பரப்பினார். இப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசி காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தை காட்டி இருக்கிறார்.

எனவே ராகுல் காந்தியின் நாக்கை யாராவது அறுத்தால் அவர்களுக்கு எனது தரப்பில் ரூ.11 லட்சம் சன்மானமாக வழங்கப்படும். எனது கருத்துக்காக எந்த வித சட்ட நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதே சமயம் எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

சஞ்சய் கெய்க்வாட் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சஞ்சய் கெய்க்வாட்டிற்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பாலாசாஹேப் தோரட் இது தொடர்பாக அளித்த பேட்டியில், “சிவசேனா எம்.எல்.ஏ பேச்சு பொறுப்பற்றதாகும். ராகுல் காந்தியை அவமதிக்கவேண்டும் என்ற நோக்கில் இதை தெரிவித்துள்ளார்” என்றார்.

https://twitter.com/mkstalin/status/1836280587281404033

இந்நிலையில் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “பாஜக தலைவர் ஒருவர், ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதியைச் சந்திக்க நேரிடும் என்றும், நாக்கை அறுப்பதாக ஷிண்டே சேனா சட்டமன்ற உறுப்பினர் பேசியது தொடர்பாக ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சகோதரர் ராகுல் காந்தியின் புகழும், மக்கள் ஆதரவும் பெருகிவருவது இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற மிரட்டல் மற்றும் வன்முறைக்கு  ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே தான் புலியை வேட்டையாடி இருப்பதாக சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதோடு அவர் போலீஸ்காரர் ஒருவரை தனது வீட்டில் நிறுத்தி இருந்த காரை கழுவ செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPCMO TamilNaduCongressDMKINCMK StalinNews7TamilRahul gandhi
Advertisement
Next Article