For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்...

09:25 PM Feb 21, 2024 IST | Web Editor
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்   தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
Advertisement

துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது என  தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  

Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022 மே 18-ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது எனவும் கூறி, கடந்த 2022 அக்டோபர் 17-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்குப் பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றதுடன் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து, வழக்கு தொடர்பாக பதில்மனுவை தாக்கல் செய்தார்.

இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்ரல் 5-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags :
Advertisement