For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது" - தவெக தலைவர் #Vijay கண்டனம்!

07:05 PM Nov 13, 2024 IST | Web Editor
 யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது    தவெக தலைவர்  vijay கண்டனம்
Advertisement

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் என்ற இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது. சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement