“இது வெறும் டிரெய்லர் தான்” - பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் ருத்ர மாதா விமானப்படை நிலையத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(மே.16) பார்வையிட்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “அமைதியின் பெயரால்தான் இந்தியாவின் விருப்பத்தை இந்த உலகம் பார்த்துள்ளது. அந்த அமைதியை சீர் குழைத்தால் நம் நாடு எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை இந்த உலகம் பார்க்க நேரிடும். பாகிஸ்தான் மண்ணில் ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை நமது இராணுவம் எவ்வாறு அழித்தது என்பதை உலகமே பார்த்தது. அங்குள்ள விமான தளங்கள் அழிக்கப்பட்டன.
சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த ஒரு பெரும் நிதியை கொண்டு அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இனி பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, இது வெறும் டிரெய்லர் தான். சரியான நேரம் வரும்போது முழு படத்தையும் உலகிற்குக் காட்டுவோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நமது விமானப்படைக்கு பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் அளவிற்கு திறன் உள்ளது. இது சாதரண காரியம் இல்லை. ஆபரேஷன் சிந்தூரின்போது அது நிரூபிக்கப்பட்டும் உள்ளது”
இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.