"எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்!" - காளியம்மாள் விலகல் குறித்து சீமான் பதில்!
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக பரவியது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் பேசியதாவது,
கட்சியில் இருந்து இயங்குவதற்கும், வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் உண்டு. இது ஒரு ஜனநாயக அமைப்பு. காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் இருந்தார். அவரை கட்சிக்குள் அழைத்து வந்தது நான்தான். யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேரலாம். பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்ற ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். கட்சியில் தொடர்ந்து இருப்பதா? அல்லது விலகுவதா? என்பதை காளியம்மாள் முடிவு செய்யட்டும். அதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை"
இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.