திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!
திருப்புவனம் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்பட்ட அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
மடப்புரம் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார், திருப்புவனம் நகை திருட்டு வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறி, விசாரணைக்காக தனிப்படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடினர். இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதன்படி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 12ஆம் தேதி சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி சிபிஐ விசாரணை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த விசாரணையை எஸ்.பி. ராஜ்பீர் மற்றும் டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 12 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து களமிறங்கியுள்ளனர்.ஒரு குழுவினர், மடப்புரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதை, மடப்புரம் கோயில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.மற்றொரு சிபிஐ குழு, மடப்புரம் வணிக வளாகத்தில் உள்ள முதல் தளத்தில், ஐந்தாம் எண் கொண்ட அறையில் வைத்து, உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் சித்தி ரம்யா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அஜித்குமாரின் கடைசி நிமிடங்கள், காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்ற விதம், அவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வருகின்றனர்.