திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மாலை 6.5 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, இந்து அமைப்பினர் காவல் தூறையினர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். இதனால் அவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
முன்னதாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள நீதிபதிகள், அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.