திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால் நேற்று மாலையில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்பினர் காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். இதனால் காவல்துறை மற்றும் இந்து அமைப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.