"எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது" - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
உசிலம்பட்டி 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தார்.
குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழகத்தின் பல்வேறு நகரங்களை சுற்றிப் பார்த்த அயலக தமிழ் இளைஞர்கள் மதுரை மாவட்டத்தின் பல்வேறு கலாச்சார பண்பாட்டு தலங்களை பார்வையிட்டனர். தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், மதுரை மாவட்டத்தின் பிரபலமான சுங்குடி சேலைகள், உணவுகள் குறித்து கூறப்பட்டது" என தெரிவித்தார்,
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "வைகை அணையில் போதிய நீர் இருந்தும் 58 ஆம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. 58 ஆம் கால்வாயில் அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறையும், திமுக ஆட்சி காலத்தில் 2 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜீவாதர உரிமையான தண்ணீரை திமுக ஆட்சியில் போராடி பெற வேண்டிய சூழல் உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 4 ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவதைப் போல மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திமுக அரசு அத்திட்டத்தை கைவிட்டுள்ளது. இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் 425 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. ஊழலில் தமிழக அளவில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாநகராட்சி ஊழலில் மண்டல தலைவர்களை முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி யாரையும் தவறாக பேசவில்லை ஆதாரத்துடன் தான் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சிப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பீடு செய்து விட்டார். எழுச்சி பயணத்தை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சருக்கு குளிர் காய்ச்சல் வந்து நெஞ்சுவலி வந்துவிட்டது. திமுக ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் ஐந்து நாள் வேலை திட்டமாக மாறி உள்ளது, பணியாளர்களுக்கு ஆறு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி Real Man ஆக செயல்பட்டு தமிழகத்தில் Iron Man ஆக வலம் வருகிறார்.
அதிமுகவிற்கு உயிர் கொடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன்னை வருத்திக்கொண்டு புரட்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடுமையான சவால்களுக்கு இடையே மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி புரட்சி பயணத்தை மேற்கொள்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்திருந்தாலும் தமிழக மக்களின் உள்ளங்களில் தெய்வமாக வாழ்கிறார்.
எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவன் கருத்து வன்மையாக கண்டிக்கக் கூடியது. பண்பாடமிக்க அரசியல் தலைவர் எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசுவது வருத்தத்துக்குரியதாக உள்ளதுதிமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் தில்லு முல்லு நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில் தான் செத்த பிணங்கள் கூட வாக்களிக்கிறது
திருமங்கலம் ஃபார்முலாவை கொடுத்தது திமுக, எடப்பாடி பழனிச்சாமி அவதூறான கருத்துக்களை துரைமுருகன் தெரிவிக்க கூடாது. சீமான் என்ன கருத்து சொல்கிறார் எதற்கு கருத்து சொல்கிறார் யாருக்கு கருத்து சொல்கிறார் என தெரியாது. அவருடைய கருத்துக்களுக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்
52 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது. இந்திய அளவில் பசி பட்டினி இல்லாத நாடாக தமிழ்நாடு உள்ளது. கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஜீபூம்பா என ஒரே நாளில் தமிழகத்தில் வறுமையை ஒழித்து விட முடியாது. திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே 2026 இல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என முதல்வர் பேசி வருகிறார்கள். மக்கள் எழுச்சியை முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது. 2026 ல் திமுக வெற்றி பெற முடியாது, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருமா என்னும் கேள்விக்கு
Wait and See என பதில் அளித்துள்ளார்.