“ஆட்சியில் பங்கு என ஆசைகாட்டினார்கள், நான் More Flexible But more Strong” - திருமாவளவன் எம்.பி. பேச்சு!
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நுழைவு வாயிலில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை சீரமைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா இன்று(ஏப்ரல்13) நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தலைவர் கீ. வீரமணி, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியபோது, “அம்பேத்கரும், பெரியாரும் சனாதன சக்திகளுக்கு அச்சுறுத்தும் வடிவங்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கும்பல் வெவ்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு களத்தில் நிற்கிறார்கள். சாதி, தமிழ், முற்போக்கு ஆகிய முகமூடிகளை அணிந்துகொண்டு விமர்சிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சனாதன சக்திக்கு மறைமுகமாக துணைபோகக்கூடியவர்கள்.
பெரியாரை எதிர்ப்பவர்கள் நமக்கு எதிரானவர்கள்தான், திராவிட அரசிலை எதிர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அம்பேத்கரின் அரசியலுக்கு எதிரானவர்கள்தான். அம்பேத்கர், பெரியார் இருவரும் ஒரே வழியில் பயணித்தவர்கள். ஆனால், இருவரையும் தனித்தனி அடையாளமாக பார்ப்பதற்கு இங்கு சிலர் குதர்க்க வாதங்களை முன் வைக்கிறார்கள். அம்பேத்கர் தனது தோழராக பெரியாரை ஏற்றுக்கொண்டார், மதம் மாறுவது குறித்து கலந்துரையாடினார். அப்போது அம்பேத்கர், இருவரும் சேர்ந்து பெளத்தத்தை தழுவி இந்து மதத்தில் உள்ள சாதி வன்கொடுமைகளை பாகுபாடுகளை, பிறப்பின் அடிப்படையில் உள்ள உயர்வு தாழ்வு பேதங்களை தகர்த்தெறிய முடியும் என்றார்.
அதற்கு பெரியார், நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். நான் இந்த மதத்தின் அடையாளத்தோடு இருந்தால் தான் மூடநம்பிக்கைகளை என்னால் சாட முடியும். அதனால் இப்போதைக்கு மதம் மாறும் எண்ணம் இல்லை என்றார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்களிடம் அம்பேத்கரின் முடிவை எடுத்து பெளத்த மதத்தை தழுவுகள் என்றார். இப்படி அவர்களுக்குள் நல்லிணக்கமான உறவு இருந்தது.
நாம் இப்படி இணைந்து இயங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் திமுக முட்டுக்கொடுப்பதைப்போல் நம்மை விமர்சிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்திருக்கிறார். அந்த கட்சிக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அந்தளவிற்கு திமுக பலவீனமாக இல்லை. திமுக, இடது சாரி ஆகிய இயக்கங்களோடு நாம் இணைந்து நிற்கக் காரணம் அவர்கள்தான் ஜனநாயகம், சமூகநீதி, முற்போக்கு, சாதி ஒழிப்பு ஆகியவற்றை பேசுகிறார்கள். நம்முடைய கருத்துக்கு உடன்பட்டு நிற்கும் இயக்கங்கள் அது. எனவே இந்த இயக்கங்கள் பலவீனப்படுமென்றால் விசிக அரசியலும் பலவீனப்படும்.
திமுக பேசும் அரசியலை வீழ்த்துவோம் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கு விசிக பேசும் அரசியலையும் வீழ்த்துகிறார்கள் என்றுதான் பொருள். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் அதை எதிர்கொள்வார்கள். ஆனால், அவர்களின் கோட்பாட்டை விமர்சிக்கும்போது வேடிக்கை பார்க்க முடியாது. நம்மிடத்தில் ஆசைகாட்டினார்கள், உங்களுக்கு கூடுதலான தொகுதிகளை பெற்றுத்தர முடியும். ஆட்சியில் பங்கு தர முடியும். நீங்கள் திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என்றார்கள். சராசரியான இந்த நகர்வுகளுக்கு விசிக ஒருபோதும் இடம்கொடுத்ததில்லை.
அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் விசிக இல்லை. வளைந்து கொடுப்பதனால் முறித்துவிட முடியும் என முயற்சித்து பார்த்தார்கள் திருமாவளவன் More Flexible But more Strong என்பதை காலம் அவ்வப்போது அவர்களுக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. என்னை துடுப்புச்சீட்டாக வைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைத்துவிடலாம் என கணக்கு போட்டார்கள். தோற்றுப்போனர்கள் இன்று மறுபடியும் பழைய யுக்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்துகிறது என்று சொல்லக்கூடிய வகையில் கூட்டணியை அமித்ஷா அறிவிக்கிறார்.
அதிமுக தலைமை தாங்கினால் எடப்பாடி பழினிசாமிதான் அதை அறிவித்திருக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வைத்து 50, 60 தொகுதிகளுக்கு மேல் அடாவடியாக தட்டிப்பறித்து போட்டியிட்டு, அதிமுக வாக்குகளை பெற்று, அதனை தங்களின் வாக்குகள் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. அதிமுகவை மெல்ல மெல்ல தேய வைப்பது, கரைய வைப்பது, நீர்த்துப்போக செய்வது என்பது பாஜகவின் உத்தி”
இவ்வாறு திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.