“கேட்பரி ஜெம்ஸ் போல் எடுத்துக்கொள்கிறார்கள்” - பாராசிட்டமால் மாத்திரை பயன்பாட்டை கிண்டலடித்த மருத்துவ நிபுணர்!
காய்ச்சல், தலைவலி என்றாலே வீடுகளில் முதலில் ஒலிக்கும் மாத்திரையின் பெயர் பாராசிட்டமால். அதிலும் பாராசிட்டமால் டோலோ 650 சமீப காலமாக மிகவும் பிரபலமாக உருவெடுத்துள்ளது. டோலோ-650 மருந்தை இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் லேசான வலிகளுக்கு கூட பரிந்துரைக்கின்றனர். அதற்கு காரணம், அதன் செயல்திறன் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரையின்படி உட்கொள்ளும் அளவே.
பரிந்துரை என கூற காரணம் ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப அமிர்தமே நஞ்சாக இருக்கும் பட்சத்தில் மருத்துகளும் அளவாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது. COVID-19 தொற்றுநோய்களின் போது, குறிப்பாக பக்க விளைவுகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டபோது, இந்த டோலோ-650 மருந்து பிரபலமடைந்தது.
டோலோபார் மாத்திரை வகையின டோலோ-650 மாத்திரையில், பாராசிட்டமால் உள்ளது. இது வலி, வீக்கம் மற்றும் காய்ச்சலின் உணர்வுகளை ஏற்படுத்தும் புரோஸ்டாக்லாண்டின் வெளியீட்டைத் தடுக்கிறது. மேலும் உடல் வெப்பநிலையை குறைக்கிறது. கொரானா காலத்தில் இந்த வகையான மாத்திரை ரூ. 400 வருவாய் ஈட்டியதாக ஃபோர்ப்ஸ் வணிக பத்திரிக்கை இதழ் தெரிவித்திருந்தது.
Indians take Dolo 650 like it's cadbury gems
— Palaniappan Manickam (@drpal_manickam) April 14, 2025
இந்த நிலையில் டோலோ-650 மாத்திரை உட்கொள்ளும் போக்கை இரைப்பை குடல் நிபுணரும் சுகாதார கல்வியாளருமான பழனியப்பன் மாணிக்கம் கிண்டலடித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்தியர்கள் கேட்பரி ஜெம்ஸ் போல் டோலோ 650-ஐ எடுத்துக்கொள்கிறார்கள்” என அதன் பயன்பாடு குறித்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.