“தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றனர்..!” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக, திறந்தவெளி மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :
“70 ஆண்டு காலமாக ஆரணி நகராட்சி வளர்ச்சியடையவில்லை. ஆரணி பற்றி பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை பேசி உள்ளார். ஆரணி பட்டு, நாகநதி ஆறு மற்றும் ஜல்ஜீவன் திட்டம் பற்றி பேசி இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதாவது பேசி இருக்கிறாரா ஆரணி சரித்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? வேள்வி யாகம் நடத்தி ஆன்மிகத்தில் சரித்திரம் படைத்த பூமி ஆரணி.
திமுக ரூ.1000 வழங்கி, மக்களை அடிமைபோல் நடத்துகின்றனர். அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றியமைத்தவர் பிரதமர் மோடி. ஊழல் இல்லாத அரசு 10 ஆண்டு காலமாக மத்தியில் இருந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் நேர்மையானவர்கள். யாரையும் மிரட்டி ராமர் கோயிலை கட்டவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து கட்டிய கோயில் ராமர் கோயில்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி தழைத்தோங்கி வருகிறது. பிரதமர் மோடி, குடும்ப ஆட்சியை அடியோடு வெறுக்கிறார். கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி என அனைத்திலும் குடும்ப ஆட்சி. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை ஆட்சி அடியோடு ஒழிய வேண்டும். 70 ஆண்டு காலம், தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 5 மொழிக் கொள்கையை பாஜக கொண்டு வரும்.
இதையும் படியுங்கள் : “சின்னவர்னு என்னை கூப்பிடாதீங்க..!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஊழல் அரசிடம் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டும். மக்களின் குரலை கேட்டு அரசு செயல்பட வேண்டும். 2024 தேர்தலைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே வேட்பாளர் தான். அது பிரதமர் மோடி. பாஜக ஆட்சி அமைந்தவுடன் காவல்துறையினரின் சம்பளம் இரட்டிப்பு செய்யப்படும். காவல்துறையினருக்கு 8 மணி நேரம் ஓய்வு வழங்கப்படும். பாஜக கையில் திட்டம் உள்ளது. காவல்துறை, விவசாயம், கல்வி ஆகியவை வளர்ச்சி பெற வேண்டும்.”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.