"தேர்தல் வருவதால் நாடகம் ஆடுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகரில் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விருதுநகர் மண், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். இந்திய அளவில் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருந்தலைவர். இந்த மண்ணில் பேசுவது எனது பாக்கியம். அவர் எந்தக் கட்சி என்றாலும், நல்லது செய்தால் மக்களிடம் புகழ் நீடிக்கும். எம்ஜிஆர், அம்மா இன்றும் வாழ்வதற்குக் காரணம் மக்களுக்குச் சேவை செய்தார்கள்.
அண்ணா, காமராஜர் போன்றோர்கள் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள். மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை திமுக எம்பி ஒருவர் அவதூறாகப் பேசியது கண்டனத்துக்குரியது. அதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்ல. அப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா?
தன்னலமற்ற தலைவர்கள் யாரையும் கொச்சைப்படுத்துவது சரியல்ல திமுகவுக்கு அப்படிப்பட்ட பண்பு கிடையாது அதனால் காற்றில் கரைவது போல திமுக கரையும். எம்ஜிஆர், அம்மா ஆட்சிக் காலத்திலும் புதிய கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். இந்த விருதுநகரிலும் 400 கோடி மதிப்பீட்டில் ஒன்று கொடுத்தோம்.
இந்திய வரலாறிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. இதைப் பெருமையோடு சொல்கிறோம். 50மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவர முடியவில்லை, அதுக்குத் திறமை வேண்டும். திறமையில்லாத முதல்வர் ஆள்கிறார். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என ஏராளமான கல்லூரிகளைத் திறந்தோம். அதனால், இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011ல் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்க்ள். இன்று நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை அதிமுக உருவாக்கிக் கொடுத்தது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் இரண்டுமுறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுக அரசும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள், எவ்வளவு முதலீடுகள் ஈர்த்தீர்கள், எவ்வளவு வேலைவாய்ப்பு என்ற வெள்ளை அறிக்கை கேட்டும் கிடைக்கவில்லை.
விலைவாசி உயராமல் அதிமுக பார்த்துக்கொண்டது. எந்த மாநிலத்தில் விலை குறைவாக விற்கிறதோ அங்கு வாங்கி இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்தோம். கொரோனா காலத்தில் கூட விலைவாசி ஏறாமல் பார்த்துக்கொண்டோம். விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்கள் கொடுத்தோம்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றது திமுக, அதன் ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். எல்லாம் பொய். நீட் தேர்வை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று முதல்வர் கையை விரித்துவிட்டார், இதைத்தான் நாங்களும் குறிப்பிட்டோம். ஆனால் பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லி ஆட்சி அமைத்த பிறகு ரத்து செய்ய முடியாது என்று பொய் சொல்லும் முதல்வர் தேவையா? சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.
சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவலருக்கே இந்த நிலை என்றால் மக்கள் பாதுகாப்பை சிந்தித்துப் பாருங்கள். போதைக்கு அடிமையாகி என்ன செய்வதென்று தெரியாமல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. எவ்வளவு பெரிய கேவலம்..? இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? பலமுறை எச்சரிக்கை கொடுத்தேன். ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை.
ஏனென்றால் விற்பனை செய்வதே திமுககாரர்கள். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினே இதை சொல்லிவிட்டார். கட்சிக்காரர் செய்வதை அவரே ஒப்புகொண்டார். நாங்கள் சொல்லலை, அவர் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல ஆசிட் வீசி நகையை திருடிவிட்டுச் சென்றனர். பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். ஸ்டாலினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக கம்பெனி நடத்துகிறார். மக்களை பார்க்கவில்லை, குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். நாட்டு மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு தில்லு இல்லை.
விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, தொழிற்சாலைக்கு கட்டணம் உயர்த்திவிட்டதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை வைத்தனர். விருதுநகரில் மண் வீடாக இருந்து காலியிடமான பகுதிக்கு சொத்துவரி 56 ல் இருந்து 1107 ரூபாயாக உயர்த்திவிட்டனர். வீடு கட்ட அனுமதி வாங்க அதிமுக ஆட்சியில் 1000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாயாக இருந்தது, இன்று 74 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எனவே இப்போது யாராலும் வீடு கட்ட முடியாது, அதனால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம், பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். விலையில்லா வேட்டி, சேலை கொடுத்தோம், திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேட்டி, சேலை கொடுக்கப்படும், அதேபோல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை கொடுப்போம். சந்தோஷமாகக் கொண்டாடலாம். உங்களுடன் ஸ்டாலின் என்று 46 பிரச்னைகள் இருப்பதைக் கண்டுபுடித்திருக்கிறார். அப்படியென்றால் கடந்த நான்காண்டுகள் என்ன செய்தீர்கள். இன்னும் 7 மாதத்தில் என்ன செய்வார்கள். தேர்தல் வருவதால் நாடகம் ஆடுறார். இதேபோல் தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து ஏமாற்றினார்.
ஏற்கனவே போட்ட மனுக்கள் என்னானது..? உங்கள் ஆசையைத் தூண்டி வாக்குகள் பெறுவதற்கு தந்திரமாக செயல்படுகிறார். விருதுநகர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில்வே சாலை கொடுத்தோம். கூட்டுக்குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டினோம், அதை திமுக செயல்படுத்தவில்லை. தார்சாலைகள், காமராஜருக்கு மணிமண்டபம், விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் கல்வி திருவிழா, சங்கரலிங்க நாடார் மணிமண்டபம் என பல திட்டங்கள் நிறைவேற்றினோம், இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.