“சாதிவாரி கணக்கெடுப்பில் அரசியல் கணக்கு பார்க்கிறார்கள்” - சென்னையில் நடந்த போராட்டத்தில் அன்புமணி பேச்சு!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தின. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.வாசன், பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முழக்கங்களை எழுப்பி உரையாற்றியிருந்தனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “ இந்த போராட்டத்தின்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழவில்லையென்றால், தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த தயங்க மாட்டோம். எங்களுக்கு வேண்டியது சமூகநீதி. ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஐடி பார்க், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் மட்டும் கட்டினால் போதாது. மக்கள் முன்னேற வேண்டும் அதுதான் உண்மையான வளர்ச்சி.
சமூகநீதியென்றால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு இருக்கும் மக்கள் முன்னேறுவதுதான் சமூகநீதி. இதை அடைய வேண்டுமென்றால் தரவுகள் இருக்க வேண்டும். எந்தெந்த மக்கள் முன்னேற்றம் அடையாமலும் அடைந்தும் இருக்கிறார்கள் என்ற கணக்கு இருந்தால்தான் மக்களை முன்னேற்ற முடியும். சமூகநீதி அடைய முடியும். இந்த கணக்குகள் இல்லாமல் எப்படி திட்டங்களை கொடுக்க முடியும். சமூகநீதிமேல் அக்கறையுள்ள அரசு என்றால், ஆட்சிக்கு வந்த அடுத்தநாள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீடு கொடுத்தால் போதாது. தனிப்பட்ட சமுதாயத்தில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கிறார்கள், அது அரசு வேலையா? தனியார் வேலையா? என அனைத்தும் தெரிந்தால்தானே அவர்களுக்கு திட்டங்களை வகுக்க முடியும். பாமக நிறுவனர் ராமதாஸ் தான் இந்த போராட்டத்தை நடத்த சொன்னார். ஒரு மனுஷன் 45 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி கிடைக்க வேண்டும் என போராடி வருகிறார். ஆனால், ஆட்சியாளர்கள் இதில் அரசியல் கணக்கு பார்க்கிறார்கள்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.