For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அவர்கள் விவசாயிகள்...குற்றவாளிகள் அல்ல...” - ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!

12:15 PM Feb 14, 2024 IST | Web Editor
“அவர்கள் விவசாயிகள்   குற்றவாளிகள் அல்ல   ”   ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மகள்
Advertisement

டெல்லியில் விவசாயிகள் பேரணியை தடுக்க அனைத்து வகையான காரியங்களும் செய்யப்பட்டு வருவதாகவும்,  அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா தெரிவித்துள்ளார்.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் நேற்று (பிப்.13) ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்தது. எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாருடன் மோதலுக்குப் பிறகு அவர்கள் இரவு எல்லைப்பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக கூறினர்.

இந்நிலையில், டெல்லியின் பூசாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியதைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவரது மகள் மதுரா சுவாமிநாதன் பேசியதாவது: 

“எம்.எஸ்.சுவாமிநாதனைத் தொடர்ந்து கவுரவிக்க, விவசாயிகளும் இணைந்து செல்ல வேண்டும். பஞ்சாப் விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்து வருகின்றனர். வெளியாகும் செய்தியின் அடிப்படையில், ஹரியானாவில் விவசாயிகளை அடைக்க சிறைகள் தயாராக்கப்படுகின்றன. பேரணியை தடுக்க அனைத்து வகையான காரியங்களும் செய்யப்படுகின்றன. அவர்கள் விவசாயிகள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல.

விவசாயிகளின் கோரிக்கைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், போலீஸ் வழக்குகளுக்கு தீர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கியது. லக்கிம்பூர் கெரி வன்முறை, நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 மறுசீரமைப்பு, உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுதல், முந்தைய போராட்டங்களில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் பல கோரிக்கைகள் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் அன்னதாதாக்கள் (உணவு வழங்குபவர்கள்). எங்கள் அன்னதாதாக்களுடன் நாங்கள் பேச வேண்டும்,  அவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது. அதற்கான தீர்வுகளை நாம் காண வேண்டும். இது எனது வேண்டுகோள். எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கௌரவிக்க வேண்டுமானால், எதிர்காலத்திற்காக நாம் திட்டமிடும் எந்த மூலோபாயத்திலும் விவசாயிகளை எங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement