“அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” - பிரேமலதா விஜயகாந்த்
மாநிலங்களவை சீட்டு கேட்பது எங்கள் உரிமை, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வருவது, உறுதி செய்யப்படாத செய்தி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக
ஒவ்வொரு வருடமும் வேலூர், திருச்சி போன்ற பல மாவட்டங்களில் மாநாடுகளையும்
பொதுக் கூட்டங்களையும் நடத்துவது வழக்கம். அந்த நிலையில் இந்த வருடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி கோயம்பேட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில், மகளிர் அணி சார்பாக 100 - க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
மகளிரணி சார்பாக நடைபெற்ற இந்த பேரணியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கையில் ஒளிச்சுடர் ஏந்தியபடி பேரணி சென்று
நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, அக்கட்சியின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதன் பிறகு மகளிர் அணியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் கூறியதாவது:
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
இருக்கிறோம். ராஜ்யசபா சீட்டு கேட்பது எங்கள் உரிமை, எங்களுக்கு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. அது உறுதி செய்யப்படாத செய்தி. அதிமுக, பாஜக சார்பில் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகுவிரைவில்
அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார், அவர்கள் ஆட்சி என்பதால் அப்படித்தான் கூறுவார்கள். இந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்கள் சொல்ல வேண்டும், ஆட்சியாளர்கள் கூறக்கூடாது என கூறினார்.