“சிஏஏ ஒருபோதும் திரும்ப பெறப்பட மாட்டது” - உள்துறை அமைச்சர் அமித்ஷா!
“குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த குடியுரிமைச் சட்டம் கடந்த திங்கள்கிழமையன்று மார்.11 ஆம் தேதி அமல்படுத்தபட்டது. இதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா கண்டனம் தெரிவித்து இந்த இரண்டு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட மாட்டது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், முதலமைச்சர் பினராயி விஜயனும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சருக்கு சிஏஏவை மறுக்க எந்த அதிகாரமும் இல்லை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் சிஏஏவை மறுக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், சிஏஏவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
“எங்கள் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான, எங்கள் இறையாண்மை உரிமை இது. இதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம். சிஏஎ திரும்ப பெற மாட்டாது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சிஏஏவை கொண்டு வந்துள்ளது. இதை திரும்ப பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை. நாடு முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. சட்டத்தை இயற்றுவதற்கும், அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு பின்னர் அனைத்து மாநிலங்களும் சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பு தருவார்கள் என நினைக்கிறேன். அரசியல் ஆதாயத்துக்காக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
மோடியின் ஒவ்வொரு வாக்கும், கல்லில் செதுக்கப்பட்டது போன்றவை. அனைத்தையும் அவர் நிறைவேற்றிவிட்டார். 2019 இல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், கொரோனாவால் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. விதிகள் இப்போது சம்பிரதாயமாகி விட்டன. நேரம், அரசியல் ஆதாயம், நஷ்டம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்கின்றனர்”
இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.