For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
02:38 PM Jul 03, 2025 IST | Web Editor
சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்    நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Advertisement

சென்னை திருவொற்றியூர் பீர் பயில்வான் பகுதியில் வசித்து வந்தவர் நவாப். பள்ளி மாணவனான இவர் நேற்று இரவு டியூசன் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் வந்த சாலையில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கிடந்தது. இதில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த மின் கம்பியில் இருந்து அந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. அந்த மழைநீரை மிதித்த மாணவன் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தான்.

Advertisement

சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் உயிரிழப்புக்கு மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் திமுக அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக் கொண்டு “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement