“திமுக - விசிக கூட்டணியில் எந்த சிக்கலுக்கும் வாய்ப்பு இல்லை” | #VCK தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் திமுக - விசிக இடையே எந்த சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“திமுக- விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்துவிட்டது. அதனால் திமுக - விசிக இடையே எந்த சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆதவ் அர்ஜூனா பேச்சால் கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பில்லை. கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசி தான் எந்த முடிவுகளையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களை பொருத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி இருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்” என தெரிவித்தார்.