மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டி இல்லை... தொண்டர்கள் அதிர்ச்சி!
மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலமாகவே தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தியும், கூட்டணியை உறுதி செய்தும் வெற்றி வாய்ப்புக்கான ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார்கள். அத்துடன் பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இரண்டு தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் அவுட்டர் தொகுதியில், நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும், நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த முடிவுக்கு அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத ஒற்றுமை நீதி யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் மணிப்பூர் இன்னர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.