"சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு" - நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!
சபாநாயகர் தேர்தலில் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கொடிக்குன்னில் சுரேஷ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி, 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மக்களவை சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முனைப்பு காட்டின. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று (ஜூன் 24) முதல் எம்.பி.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
கடந்த 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டில் இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஆனால் மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாகவும், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் மூத்த எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நியூஸ் 7 தமிழ் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
“ மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு அவை மரபின்படி இடைக்கால சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியினர் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களை வைத்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள வாய்ப்புகளின் அடிப்படையில் மக்களவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது” இவ்வாறு கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்தார்.