8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்... பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவர் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுவந்துள்ளார். நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீரேந்திர ஸ்ரீவஸ்தவா வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.
இதனையடுத்து குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் பெண்ணின் உடல் அழுதிய நிலையில் இருந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடர்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தீரேந்திர ஸ்ரீவஸ்தவாவிடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தீரேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இந்த வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் படிதார் என்பவர் வாடகைக்கு குடியேறினார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு சஞ்சய் படிதார் வீட்டை காலி செய்தார். இருப்பினும் அந்த வீட்டின் ஒரு அறையில் மட்டும் அவருக்கு சொந்தமான சில பொருட்கள் இருந்தன.
அந்த பொருட்களை விரைவில் எடுத்துவிடுவதாக சஞ்சய் படிதார் கூறிய நிலையில், நான் அந்த அறையை மட்டும் பூட்டிவிட்டு, வீட்டை வேறொரு நபருக்கு வாடகைக்கு விட்டேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அறையின் மின் இணைப்பை துண்டித்தேன். இந்நிலையில்தான் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது" என்றார்.
சஞ்சய் படிதார் 30 வயதுடைய பெண்ணுடன் லிவ்-இன் உறவின் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் சஞ்சய் படிதாரை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் அவர் அந்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஜுன் மாதம் நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சஞ்சய் படிதாரை கைது செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.