கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ பொய்யானது!
This News Fact Checked by ‘Newschecker Tamil’
கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளது.
Claim: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை வீடியோ
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் நடந்ததாகும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த திங்களன்று (13/05/2024) ராஜ்ய சபா எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்தது.
இந்நிலையில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் இச்சம்பவமானது டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் நடந்ததாக Lokmattimesmedia எனும் ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. குடும்பப் பிரச்சனையை தீர்க்க வந்தவர்களிடையே இந்த வன்முறை நடந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் வழக்கறிஞர் ஷாகித் அஹமது என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் மே 12, 2024 அன்றே இவ்வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவரும் இச்சம்பவம் டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடந்ததாகவே பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து டெல்லி பார் அசோசியேஷன் செயலாளர் அதுல் குமார் ஷர்மாவை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு பேசினோம். அவர்,“வைரலாகும் வீடியோவுக்கும் ஸ்வாதி மாலிவால் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை, இது பழைய விஷயம்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து டிஸ் ஹசாரி நீதிமன்றம் சப்ஸி மண்டி காவல்நிலையத்தின் கீழ் வருவதால், அந்த காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரியை தொடர்புக்கொண்டு பேசினோம். அவர் மே 09, 2024 அன்று டிஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்திற்கு வந்த கணவன் மனைவி குடும்பத்தாரிடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து இந்த சண்டை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
Conclusion:
கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ தவறான வீடியோவாகும். அவ்வீடியோவுக்கும் கெஜ்ரிவால் வீட்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Newschecker Tamil’ and republished by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.