"வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது" - செல்லூர் ராஜு பேட்டி!
மதுரையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"மழைக்காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் 16 நீர்நிலைப் பகுதிகளில் தூர் வாராமல் உள்ளது. எப்போது வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும். மதுரை மாநகரில் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுவதால் பனையூர் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதை உடைக்கப்பட்டது. ஆசியாவிலேயே ஒரு சில தெப்பக்குளம் தான் மாரியம்மன் தெப்பக்குளம் போன்று உள்ளது.
முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் 1296 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முடித்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 88 மேல்நிலைத் தொட்டி மூலமாக தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலமாக சோதனை ஓட்டம் செய்தால் தான் அந்தத் திட்டம் முழுமையாகும்.
என்னுடைய வீட்டிற்கு இப்போது தான் பைப் லைன் போடப்பட்டுள்ளது, அதுவும் பல இடங்களில் சரியாக செய்யவில்லை, வைகை அசுத்தமான ஓடையாக காணப்படுகிறது, குப்பையும் கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது சித்திரை திருவிழாவின் போது மட்டும் அகற்றப்படுகிறது. வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது. வைகை மீண்டும் புனித நீராக மாற்றப்பட வேண்டும் இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரை மாநகராட்சி 40-வது இடத்தில் உள்ளது வேதனையாக அளிக்கிறது. வரலாறு காணாத ஊழல் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளது.
200 திருமண மண்டபங்களுக்கு வீட்டு வரி போடப்பட்டுள்ளது. 19 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவறு செய்த மூளையாக செயல்பட்ட ரவி என்பவரை உடனடியாக வரவழைத்து கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் மனுக்கள் வாங்கினார்கள், தற்போதும் 45 நாட்களில் மனு வாங்கி எப்படி நிவர்த்தி செய்வார்கள். உங்களுடன் ஸ்டாலின் முகாம் அரசியல் ஸ்டாண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா என்று தெரிவித்துள்ளார்.