அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு - பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!
அரியலூர் ஜெயங்கொண்டம் ஏரியில் தனது பிறந்தநாளன்று சக மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதியின் மகன் நகுலன் (16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நகுலனுக்கு நேற்று (டிச. 25) பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக கொம்மேடு செல்லும் பாதையில் பிள்ளை ஏரியில் சக மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக நீச்சல் தெரியாத நகுலன் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சக மாணவர்கள் அவரைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இருப்பினும் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. இதனால் சக மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தேடி பார்த்துள்ளனர்.
நகுலனை ஏரியில் அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நகுலனின் உடலை மீட்டனர். பிறந்தநாள் அன்று மாணவன் இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.