For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டம் ; காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன..?

புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.
10:04 PM Dec 07, 2025 IST | Web Editor
புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டம்   காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன
Advertisement

கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் விஜய். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.   மூன்றாவதாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் மக்களை சந்தித்து விஜய் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Advertisement

கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து  ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து உள் அரங்கு கூட்டங்களில் மட்டும் விஜய் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அம்மாநில காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும் ரோடு-ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.கவிற்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (டிசம்பர் 09) புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்

* பொதுக்கூட்டத்தில் மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.

* தவெக சார்பில் வழங்கப்பட்ட க்யூஆர் கோட் உடன் கூடிய பாஸ் வைத்திருப்போர் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை

* குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.

* இந்த பரப்புரை பொதுக்கூட்டம் என்பது புதுச்சேரி மக்களுக்கானது. தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.

* வாகனங்களை பாண்டி மெரினா பார்க்கிங், ஸ்டேடியம் பின்புறம் உள்ள பார்க்கிங் மற்றும் பழைய துறைமுக பகுதிகளில் நிறுத்த வேண்டும். சாலைகளிலோ அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிறுத்த கூடாது.

* நிகழ்ச்சிக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு, தீயணைப்பு என்ஜின், அவசர வழிப்பாதைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement