“விளையாட்டுத் துறையை Promote செய்ய வேண்டும், அமைச்சரை அல்ல” - இபிஎஸ் விமர்சனம்!
கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ் நாடு அரசே செலுத்தும். அதிமுக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும், பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர். இதில், “என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்” என்று மார்தட்டல் வேறு. 24 மணி நேரமும் முழு கவனமும் ரீல்ஸ்க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?|
பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே. இந்த லட்சணத்தில், அதிமுக ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார். SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அதிமுக அரசுதான்.
மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும் ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும் தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது அதிமுக அரசுதான். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான ஆட்சி. அமைச்சர் பெயர் முக்கியமல்ல, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் அதிமுக அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அதிமுக அரசுதான். பாஸ்போர்ட்டே இல்லாமல், கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்? மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!
முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்! விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல. மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்தாத திமுக அரசு இருந்து என்ன பயன்? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை-யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்? இதைவிடக் கொடுமை என்னவென்றால், இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த அரசில் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.
“மாணவர்களை Apply பண்ண விட்டா தானே Fees கொடுக்கணும்?” என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா? உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.