"சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில்
“பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கடந்த ஜூலை 3-ஆம் நாள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவைக் கட்சிக் கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டு இன்றுடன் 108 நாள்கள் ஆகின்றன. அதேபோல், சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் கடந்த செப்டம்பர் 24-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு 24 நாள்களாகி விட்டன. இதற்கான கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டு விட்டன. அதுமட்டுமின்றி பல முறை அவருக்கு நினைவூட்டல்கள் செய்யப்பட்டுவிட்டன. சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக பல முறை வலியுறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் பயனில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவு எடுப்பதாகவும் இதுவரை கூறி வந்த பேரவைத் தலைவர், நேற்று பேரவையில் இந்த சிக்கல் எழுப்பப்பட்ட போது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டார்.
பேரவையின் மொத்த எண்ணிக்கையில் 10%, அதாவது 24 உறுப்பினர்கள் உள்ள கட்சிகளை மட்டும் தான் பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
ஒரு கட்சியை எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டும் தான் 10% உறுப்பினர்கள் தேவை. எதிர்க்கட்சியைத் தவிர மற்ற கட்சிகளின் நிர்வாகிகளின் தேர்வும் பேரவைத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால், அந்த மரபை வசதிக்கேற்ப பேரவைத் தலைவர் மாற்றக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைமையால் பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டமன்ற நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்; அவர்களுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு ஆகும். இதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை.
இனியாவது பேரவைத் தலைவர் அறத்திற்கு பணிய வேண்டும்; நீதியை மதிக்க வேண்டும். அந்த வழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத்தலைவராக சதாசிவம், கொறடாவாக சி.சிவக்குமார் ஆகியோரை அங்கீகரிக்க வேண்டும்"
என்று தெரிவித்துள்ளார்.