For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடியால் உண்டான பரபரப்பு - இந்த முறை ராமநாதபுரம் தொகுதி யாருக்கு?

10:19 AM Feb 02, 2024 IST | Jeni
பிரதமர் மோடியால் உண்டான பரபரப்பு   இந்த முறை ராமநாதபுரம் தொகுதி யாருக்கு
Advertisement

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படும் ராமநாதபுரம் தொகுதி, இம்முறை யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரபரப்புக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்...

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இம்முறை ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல் தமிழ்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராமநாதபுரம்,  அறந்தாங்கி,  திருச்சுழி,  பரமக்குடி,  திருவாடனை,  முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி. 15.57 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில்,  இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளன.  குறிப்பாக 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான ரித்திஷும்,  2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளரான அன்வர் ராஜாவும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்றனர்.2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆதரவுடன் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,  ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 4.69 லட்சம் வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியது.  அக்கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி,  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1.27 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காயிதே மில்லத் காலத்திலிருந்து தற்போது தலைவராக உள்ள காதர் மொகைதீன் காலம் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,  திமுக-வுடன் சுமூகமான உறவை கடைபிடித்து வருகிறது.

போட்டியிட்டது ஒரு தொகுதி தான் என்றாலும் அங்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,  இம்முறையும் அதே ராமநாதபுரம் தொகுதியை திமுக-விடம் கேட்டுப்பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற தகவலால் பரபரப்பு நிறைந்த தொகுதியாக மாறியுள்ள ராமநாதபுரம் தொகுதியில், கூட்டணி கட்சிகளை நிறுத்தாமல் திமுகவே நேரடியாக களம் காண முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  குறிப்பாக மாணவர் அணி தலைவரான ராஜீவ் காந்தியை, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.இதையும் படியுங்கள் : ‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..! 

இன்னும் ஒருசில தினங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,  ராமநாதபுரம் தொகுதி கிடைக்காவிட்டால்,  திருச்சி நாடாளுமன்ற தொகுதியையாவது தங்களுக்கு ஒதுக்க திமுக-விடம் வலியுறுத்தும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.  ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால்,  அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அவரை எதிர்த்து போட்டியிடப்போவது திமுக-வா? இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags :
Advertisement