Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முடிவுக்கு வந்த சட்டப்பேரவை "இருக்கை" அரசியல்...

01:17 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை ஏற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே இருக்கையை ஒதுக்கியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.

Advertisement

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 66 பேர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த அதிமுக அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வுசெய்யப்பட்டனர்.

2022-ம் ஆண்டு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்,  அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவருடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கமும் நீக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையின் அதிமுக துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். எனவே, சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அந்தஸ்தில் ஓ.பன்னீர்செல்வம் வகித்த இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுகவினர் மனு அளித்தனர்.

ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு உடனடியாக முடிவு எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொரு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போதும், சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 19.07.2022 மற்றும் 11.10.22 தேதிகளில் கடிதங்களும், அதன்பின்னர் 10-க்கும் மேற்பட்ட முறை நினைவூட்டல் கடிதங்களும் கொடுத்தனர்.

"சட்டப் பேரவையில் காங்கிரஸுக்கு 18 உறுப்பினர்கள் தான் உள்ளனர். அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவியும் துணைத் தலைவர் பதவியும் அளித்து அருகருகே அமர வைத்த சபாநாயகர், எங்களது கோரிக்கையை ஏன் நிராகரித்து வருகிறார்?" என்று தொடர் கேள்விகளையும் எழுப்பி வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

"சட்டப் பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், காலம்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் அருகே தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை இருந்து வந்தது. இந்த மரபை சபாநாயகர் அப்பாவு பின்பற்றவில்லை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை" என்றும் அவர் கூறி வந்தார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவையும் சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வந்தார்.

ஆனால், கடந்த 2016-2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் என்ன செய்தாரோ அதைத் தான், சபாநாயகர் அப்பாவு இப்போது செய்து வருவதாக திமுகவினரும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கூறி வந்தனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்குவதில், சபாநாயகர் தனபால் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வந்தார் என்பது அவர்களது குற்றச்சாட்டு. 

2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. 89 எம்எல்ஏக்களை பெற்ற திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி சக்கர நாற்காலியில் வர வேண்டியிருப்பதால், அவர் வந்து செல்ல ஏதுவாக முன்வரிசையில் இருக்கை ஒதுக்கித் தர திமுக கோரியது. ஆனால் அவருக்கு 207-வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனைத் திமுக ஏற்கவில்லை. அந்த இருக்கை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சக்கர நாற்காலியுடன் வந்து செல்ல வசதியாக இல்லை என திமுகவினர் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த அப்போதைய அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், "திமுக என்றாலே கருணாநிதி தான்... அவர் தானே கட்சியின் தலைவர்... சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கருணாநிதிக்குத் தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்து தான் கருணாநிதிக்கு உள்ளது" என்று கூறினார்.

2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போதைய சபாநாயகர் தனபால், "மரபுப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருக்கைகளை ஒதுக்குவது பேரவைத் தலைவரின் உரிமை. அதை விவாதிக்க முடியாது" என்று கூறினார்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற போது ஜூன் 17-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் அறையை திமுக எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல் வரிசையில் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இதற்குப் பிறகு கருணாநிதி உடல்நலம் குன்றியதால், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது நாளான நேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளப்பினார். அப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருமாறு தொடர்ந்து இந்த அவையிலே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பலமுறை நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள். எனினும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "முதலமைச்சர் பரிந்துரைப்படி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிலளித்தார். அதோடு மட்டுமல்லாமல் அதனை உடனடியாக செயல்படுத்தினார். சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-வது நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.  இதுவரை எடப்பாடி பழனிசாமி அருகே முன் வரிசையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு 217-வது இருக்கையை அதாவது 2-வது வரிசைக்கு மாற்றிவிட்டார்.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், சட்டப் பேரவையில் இருக்கை மாற்றம் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.  கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்ட அதிமுக, எப்போதும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என கூறி வருகிறது. ஆனால், அதிமுக சார்பில் 3 முறை முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க அவர் பாஜகவிலேயே சேர்ந்துவிடுவார் என கூறப்படுகிறது. மேலும், அவரது மகனும், அதிமுகவின் மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் வாய்ப்புக் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒருவேளை பாஜகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து விட்டால் இருக்கை மாற்றம் செய்யாவிட்டால் சட்டப் பேரவையில் முன்வரிசையிலே அவர் தொடர்ந்து அமர்வார். முன் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அடுத்து பாஜகவில் இருக்கும் ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற சூழலை தவிர்க்கவே, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்ததாகக் கருதப்படுகிறது. 

தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் எப்போதும் போட்டி... இதில் பாஜகவுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதாலேயே முதலமைச்சர் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.  இதே கருத்தை அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமியும் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

எது எப்படியோ,  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் கட்சிகளின் அரசியல் கூட்டணி அமைவதற்கு முன்பே,  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. 

Tags :
AgendaAIADMKAppavucondolencesDMKedappadi palaniswamyElection2024EPSNews7Tamilnews7TamilUpdatesO Panneer selvamOPSRB UdhayakumarTN AssemblyTN Assembly 2024TN Assembly Session
Advertisement
Next Article