நடுவானில் பறந்த விமானம்... அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்!
கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் 22 வயதான கௌஷிக் கரண். இவர் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பெங்களூருவில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அவர் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த பணிப்பெண்கள் அவரை தடுத்தனர்.
இதனையடுத்து விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர். கௌஷிக் கரண் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கரண் விமானத்தில் பயணம் செய்வது இதுவே முதல் முறை என்றும், தனக்கு விதிகள் தெரியாது என்றும் கூறினார். மேலும், அவர் இந்தச் செயலை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், எழுந்து நிற்க மட்டுமே அவசர கால கதவை பிடித்துக் கொண்டதாகவும் கூறினார்.