"தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது.
ஆட்சி அமைப்பதற்கு முன்பு "தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைப் குறைத்து மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும்" என்று வாக்குறுதி எண் 231-இல் முழங்கியது. ஆனால் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அதற்கு நேர்மாறாக, மின்வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி, தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி, விலையை உயர்த்தி, மக்கள் மீதும் அரசு மீதும் நிதிச்சுமையை ஏற்றி வருகிறது.
ஆட்சி முடியும் தருவாயில் அதிக தொகை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவது. மின்கட்டண உயர்விற்கு வழிவகுக்கும் என்பது 'அறிவாலய' அரசுக்கு தெரியாதா? தொடர்ச்சியான மின் கட்டண உயர்வால் வாடி வரும் மக்களை மேன்மேலும் மின்சாரக் கட்டண உயர்வால் தாக்குவது முறையா? மாநிலத்தின் கடன் சுமையையும் மக்களின் மின்கட்டண சுமையையும் ஒருசேர உயர்த்தி தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு வீண் பெருமை பேசலாமா?
மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு என்று கொடுத்த வாக்குறுதியை மறந்து மக்கள் நலனைத் தூக்கியெறிந்த திமுக அரசுக்கு தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடிக்கு மின்சாரம் வாங்கும் திட்டத்தையும் தூக்கியெறிவதில் ஒன்றும் சிரமம் இருக்காது. எனவே, தனியாரிடமிருந்து வாங்கும் திட்டம் ஏதுமிருந்தால் அவற்றைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.