விமானியை தாக்கிய பயணி - மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!
இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமானது. மேலும் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமானது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளார்.
And there he goes..
"Sorry"
👨✈️"No. No sorry". #Indigo #passenger #airlines pic.twitter.com/Df9nv5ZHX2
— chandana (@chan2015x) January 15, 2024
விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. சாஹில் கட்டாரியா என்ற அந்த பயணி திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் அனுப் குமார் என்ற விமானியை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக பணிக்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர்.
இந்நிலையில், விமானம் தாமதமானதற்கு பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே மேலும் ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் சாஹில் கட்டாரியா தான் தாக்கிய அனுப் குமாரிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது அனுப் குமார் மன்னிக்க முடியாது என கூறுகிறார். இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. ஐபிசியின் பிரிவு 323, 341மற்றும் 290 மற்றும் விமான விதிகளின் பிரிவு 22 ஆகியவற்றின் கீழ் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.