For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

12:08 PM Jul 24, 2024 IST | Web Editor
பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
Advertisement

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில்  ஈடுபட்டதை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். 

Advertisement

மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்திருந்தார். அதில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிக நிதிகளும், சிறப்பு திட்டங்களும் வாரி வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் மத்திய அரசுக்கு வரி வருவாய் அதிகம் அளிக்கும் தமிழ்நாட்டிற்கு என எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டை சேர்ந்த கட்சிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சூழலில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன் வைத்த போது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கார்கேவின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement