காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!
மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பட்டினியுடன் வந்து படுத்திருந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று (டிச. 10) மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வானது மதுரை மாநகரில், 13 மையங்களில் நடைபெற்றது. இதில் மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் ஆயிரக்கணக்கான பெண் தேர்வர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது பாட்டியின் துணையுடன் தேர்வு மையத்திற்கு வந்திருந்தார். தேர்வு மையத்திற்கு விரைவாக வர வேண்டும் என்பதால் இருவரும் உணவு உண்ணாமல் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர்.
தேர்வு எழுதுவதற்காக பேத்தி தேர்வு மையத்திற்கு சென்ற நிலையில், அவருடன் துணைக்கு வந்திருந்த பாட்டி பசியின் காரணமாக லேசான மயக்கத்தில் கல்லூரி வளாகத்தின் வெளியில் படுத்திருந்தார். இதனைப்பார்த்த, தேர்வு மைய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மூதாட்டியிடம் சென்று விசாரித்தனர். அப்போது மூதாட்டி சாப்பிடாததை அறிந்த பெண் காவலர்கள், தாங்கள் சாப்பிடுவதற்காக கொண்டு வந்த உணவை மூதாட்டிக்கு கொடுத்து சாப்பிட வைத்தனர்.
பின்னர் அவரை பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று, அருகில் உள்ள அறை ஒன்றில் ஓய்வெடுக்க வைத்தனர். “உங்கள் பேத்தி தேர்வு எழுதி முடித்து வந்த பின்பாக உங்களை எழுப்பி விடுகிறோம், அதுவரை ஓய்வெடுங்கள்” என அந்த பாட்டியை பெண் காவலர்கள் அன்போடு அரவணைத்துக்கொண்டனர். பேத்தி தேர்வு எழுதுவதற்காக பசியோடு வந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.