”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” - சீமான் வாழ்த்து..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் பா.இரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், துருவ் விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள 'பைசன்' (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் அவரின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது.
மாரி செல்வராஜின் வலி தோய்ந்த வார்த்தைகள்தான் படத்தின் உரையாடல்களாக வெளிப்பட்டுள்ளது. சிந்திக்க வைக்கும் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றுமே காலம் கடந்தும் நிற்கும் தத்துவங்களாக உள்ளத்தில் ஊடுருவி சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுகிறது.
கண்கள் நிறையக் கனவுகளோடும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடும் ஒரு திறமை வாய்ந்த கபடி வீரன், சாதிய மோதல்கள் சூழ்ந்த கிராமச் சூழல், குடும்பம், காதல், ஊர்ப்பகை, அதிகாரம், அரசியல் செல்வாக்கு என அத்தனை தடைகளையும் தாண்டி எப்படி வெல்கிறான் என்ற கனமான கதாபாத்திரத்தை ஏற்று கதையின் நாயகனாக நடித்திருக்கும் துருவ் விக்ரம், நடித்துள்ளார் என்பதை விட வனத்தி கிட்டானாகவே வாழ்ந்துள்ளார் என்று கூற வேண்டும். பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது.
சாதிய மோதல்கள் நடக்கும் சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகளைக் காக்க துடிக்கும் ஒரு தந்தையின் வலி மிகுந்த வாழ்வினை தம் அசாத்திய நடிப்பால் நம் கண் முன்னே கொண்டுவந்து கலங்கச் செய்துள்ளார் பசுபதி. அவரைப்போலவே படத்தின் முதன்மை கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்து, உயிரோட்டமாக நடித்திருக்கும் அமீர் மற்றும் லால், படம் முழுதும் விளையாட்டு வாத்தியாராக வலம் வரும் அருவி மதன் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். படத்தின் நாயகியாக காதலை வெல்ல வைக்கப் போராடும் அனுபமா பரமேஸ்வரனும், நாயகனின் அக்காவாக தம்பியை வெல்ல வைக்க வாதாடும் ரஜிஷா விஜயனும் போட்டிப்போட்டு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைப்போலவே உண்மையான கபடி வீரரான பிரபஞ்சன், அழகம் பெருமாள், ரேகா நாயர் உள்ளிட்ட அனைவருமே நடிப்புத்திறனால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர்.
இளம் வயதில் இத்தனை முதிர்ச்சியான கலைப்படைப்பைத் தொடர்ச்சியாகத் தரும் மாரி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள். துருவ் விக்ரம் உள்ளிட்ட பைசன் திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.