"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் ஒரு நாடகம்" - அண்ணாமலை பேட்டி
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கினாடல. இந்தக் கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் பங்கேற்றனர்.
முன்னதாக திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பனையூர் பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"யாருக்கும் பிரச்னை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார். தமிழ்நாட்டிற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது.
4 முறை கேரளாவுக்கு சென்றபோதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட மாநில பிரச்னை குறித்து பேசவில்லை. அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என கூறும் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதலமைச்சரிடம் கேட்கட்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்னையும் ஏற்படப்போவதில்லை. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப்போவதில்லை"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.