மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குப்பிகளை மக்களவையில் வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.
அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர். இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே விசாரணையை தொடங்கினர். விசாரணையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை, மக்களவைக்குள் புகுந்த இருவர் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
The unprecedented security breach in the parliament poses a dangerous threat to our august temple of democracy.
Swift action must be taken without delay. I appeal for launching a prompt investigation, fixing accountability, and implementing measures to prevent future lapses,…
— M.K.Stalin (@mkstalin) December 13, 2023
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“நாடாளுமன்றத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் கெடுபிடிகள், நமது ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நாடாளுமன்றத்தின் மீது புகைக்குப்பிகள் வீசப்பட்ட விவகாரத்தில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உடனடி விசாரணையைத் தொடங்கவும், அவரவர்கள் பொறுப்புகளை சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.