”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30-இல் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 420 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 397 பேர் படுகாயமடைந்தனர். இந்த பேரிடர் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. நிலச்சரிவு கேரள வரலாற்றில் மிக மோசமான பேரிடர் எனவும் பதிவாகியது. மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம், குறித்து வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் பேசினார். அவர்,
“வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பால் அங்கு விளைவிக்கப்பட்டிருந்தன காஃபி, தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் அழிந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள், , விடுதி, ஹோட்டல் என அப்பகுதியில் சிறு வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரிழந்தனர்.பேரழிவு நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு சீரமைப்பு உதவிகள் முறையாக செய்து தரப்படவில்லை.கடந்த ஓராண்டாக வயநாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதன் பலனாக, கொஞ்சம் நிதி தான் விடுவிக்கப்பட்டது. ஆனால் இது போதவே போதாது!தங்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு கடனுதவி அளித்து, அதன்பின் அந்த பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அரசு அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமா?
”பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஓராண்டைக் கடந்தும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில், வயநாட்டு மக்களின் சர்பாக நான் வைக்கும் நியாயமான கோரிக்கை இதுதான்: மத்திய அரசு மேற்கண்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றார்