விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!
மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எம்.பி.யும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒன்றில் தனி சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றனர்.
எனவே இந்த தொகுதியில் திமுக, விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு தனித்தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 தொகுதி, கொமதே கட்சிக்கு 1 தொகுதி என தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்.பி.யும், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் இதனை தெரிவித்தார்.