"மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடிப் பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்பியுமான வில்சன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியாலும், அவரின் தொடர் அறிவுறுத்தலின் பேரில் நான் மேற்கொண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு சென்னை நீதிமன்றம் 27.7.2020 அன்று உத்திரவிட்டும் அதனை மதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று தர நான் வாதாடிய பின்பு நீட் தேர்வை நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறுத்திய பின்பு அதற்கு பயந்து, பணிந்த மோடி அரசு, வேறு வழியின்றி, ஜூலை 29 2021, அன்று மருத்துவக் கல்விக்கான அனைத்திந்தியத் தொகுப்பிற்கு மாநில அரசுகள் தரும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டது.
உச்சநீதிமன்றத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவூறுத்தலின் பேரில் நான் ஆஜராகி இடஓதுக்கீடு தந்தது சரியே என வாதிட்டு வெற்றி பெற்றேன். சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்தியா முழுவதும் உள்ள 5022 க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி எனும் பெருங்கனவு ஆண்டுதோறும் நிறைவேறி வருகிறது. ஆண்டுதோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு வரை சுமார் 15066 இடங்களை மருத்துவ படிப்பில் இந்த வழக்கின் மூலமாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெற்று தந்திருக்கிறாம். சமூகநீதியில் மகத்தான வெற்றி பெற்ற மூன்றாவது ஆண்டில் இன்று நாம் நுழைகிறோம். வெற்றித் திருநாள் இன்று. இருளை நீக்கிய நன்னாள் இன்று. நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பை போற்றும் மகத்தான நாள் இன்று” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் திமுக பெருமிதம் கொள்கிறது. மேலும், இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் @aifsoj முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் OBC இட ஒதுக்கீடுகள் குறித்த பல ஆக்கபூர்வமான விவாதங்களை ஊக்குவித்துள்ளது.
எங்கள் நிகழ்ச்சி நிரலில் பல விஷயங்கள் இருந்தாலும், பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூக நீதியை நிலைநாட்ட நமது உரிமையான பங்கைப் பெறவும், மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.